search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ பன்னீர்செல்வம் தம்பி"

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது ஏன்? என்ற பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. #OPS #Raja #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி, ஓ.ராஜா. பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரான இவர், அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருந்தார். கட்சியில் எந்த பதவியும் வகிக்காவிட்டாலும் தேனி, மதுரை பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக வலம் வந்தார்.

    இவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-



    அ.தி.மு.க.வின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், அ.தி.மு.க.வின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஓ.ராஜா (பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர்) அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இவருடன் அ.தி.மு.க.வினர் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    முன்னதாக மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் பதவிக்கு அவர் மனுதாக்கல் செய்திருந்தார். இது அ.தி.மு.க.வினருக்கு பிடிக்காததால், கட்சிக்குள் பூசல் வெடித்தது. எனினும் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவராக ஓ.ராஜா தேர்வானதாக நேற்று அறிவிப்பு வெளியானது.

    இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் அவரை நீக்குவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.ராஜாவின் அண்ணனும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டனர்.

    ஜெயலலிதா உயிருடன் இருந்த நேரத்தில், ஓ.ராஜா மீது கொலை வழக்கு புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக ஆன நேரத்தில், மதுரை, தேனி மாவட்ட அ.தி.மு.க.வில் ஓ.ராஜாவின் தலையீடு அதிகரித்தது. இதன் காரணமாக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.

    ஓ.பன்னீர்செல்வமே தனது தம்பியை கட்சியில் இருந்து நீக்கி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #OPS #Raja #ADMK


    ×